முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ’திமுக அமைதி பேரணி’ நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் வரை ‘அமைதிப் பேரணி’ நடைபெற்றது. இதன் நிறைவாக, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் உட்பட அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலை பகுதியில் இருந்து வாலாஜா சாலை வழியாக மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் வரை பேரணி சென்றனர். அதில் ஆயிரக்கணக்காண திமுக தொண்டர்கள், கருணாநிதியின் புகைப்படத்தை ஏந்தியபடி பேரணியில் கலந்துகொண்டனர். அப்போது கருணாநிதியை புகழ்ந்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே சேகர்பாபு, எ.வ.வேலு, கே. என் நேரு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்டோரும், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என பலரும் இந்த அமைதி பேரணியில் பங்கேற்றனர்.
இதேபோல, கருணாநிதியின் நினைவு தினத்தை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் அனுசரித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வட்டம் சார்பில் கருணாநிதிக்கு நினைவு அஞ்சலி செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
முன்னதாக கருணாநிதியின் நினைவுநாள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தலைவர் கலைஞர், முத்துவேலரும் – அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு! தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு! அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திடவும், முன்னேற்றிடவும் உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” , “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்” என குறிப்பிட்டிருந்தார்.


