தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் முக்கியமான இசையமைப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் ஜிவி பிரகாஷ். வெயில் படத்தில் அவர் மியூசிக் டைரக்டராக அறிமுகமாகும்போது டீன் ஏஜ் பருவத்தில்தான் இருந்தார். அப்போதே அவர் தனது இசையில் அனைவரையும் கவர்ந்தார். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன ஜிவிக்கு. அறிமுகமான சில வருடங்களிலேயே ரஜினி உள்ளிட்டோரின் படத்துக்கும் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார்.
அப்படிப்பட்ட நிலைமையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்துக்கு இசையமைத்தார். பின்னணி இசையும், பாடல்களும் அவ்வளவு ஈர்க்கும்படி இருந்தன. இசை மிகச்சிறப்பாக இருந்ததன் காரணமாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வாங்கினார். அவர் விருது வாங்கியதை அனைவருமே கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பு, நடிப்பு என பிஸியாக இருக்கும் அவர்தான் தனுஷ் நடித்த வாத்தி படத்துக்கும் இசை. அந்தப் படத்தின் பாடல்களும் பட்டையை கிளப்பின. இந்நிலையில் 71ஆவது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் 2023ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என தெரிவிக்கப்பட்டது. எனவே இரண்டாவது முறையாக அவர் தேசிய விருது பெற்றிருக்கிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.


