தீபாவளி பண்டிகை நெருங்குவதால், அதுதொடர்பான அரசின் அறிவிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளன. இப்போது, தற்காலிக பட்டாசு கடை அமைப்பவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெறவேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், உரிமம் பெற விரும்புவோர், கடை அமைந்துள்ள கட்டடத்திற்கான வரைபடம், கடை அமைந்துள்ள இடத்தின் சட்டபூர்வ உரிமைக்கான ஆவணங்கள், முகவரிக்கான சான்று, அரசுக்கணக்கில் ரசீது ஆகியவற்றிற்கான நகல்களையும், ரூ.500/-செலுத்தியதற்கான பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் இணைத்து, இணையவழியில் (https://tnedistrict.tn.gov.in) 20.09.2025-க்குள் விண்ணப்பித்திட வேண்டும் என்றும் 20.09.2025-க்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது எனவும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்காலிகப் பட்டாசு கடை உரிமம் பெற தேவையான ஆவணங்கள்
- வெடிபொருள் சட்டவிதிகள் 2008-ன் கீழ் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிகப் பட்டாசு உரிமம் தமிழ்நாடு அரசு உத்தரவின் படி ஒற்றை சாளரமுறையில் (Single Window System) பெற்றிட வேண்டும். இணையவழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் கடையின் வரைபடம் இருக்க வேண்டும்.
- உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்புநிதி ஆண்டில் வீட்டுவரி செலுத்திய இரசீது நகல். வாடகைக் கட்டிடம் எனில், உரிமையாளர் வீட்டுவரி செலுத்திய அசல் இரசீது நகலுடன், கட்டிட உரிமையாளரிடம் முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம் இருக்க வேண்டும்.
- உரிய தலைப்பின் கீழ் அரசுக் கணக்கில் உரிமக் கட்டணம் அசல் செலுத்துச் சீட்டு இருக்க வேண்டும்.மனுதாரரின் மார்பளவு பாஸ்போர்ட் அளவுள்ள வண்ணபுகைப்படம் வேண்டும்
- மனுதாரரின் அசல் நிரந்தர கணக்கு எண் (Pan Card), ஆதார் கார்டு, குடும்ப அட்டை /ஸ்மார்ட் கார்டு இருக்க வேண்டும்
தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற மாண்பமை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் :
- பட்டாசு கடைகளில் மேல்மாடியில் குடியிருப்பு மற்றும் பட்டாசு இருப்பு இருத்தல் கூடாது.
- பட்டாசு கடையின் அருகில் மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், திருமண மண்டபங்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள பகுதிகள்/கட்டிடங்கள் இருத்தல் கூடாது.
- பொதுமக்கள் கூடும் பகுதிகள், பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையங்கள் அருகில் பட்டாசு கடை அமைத்தல் கூடாது.
- பட்டாசுகடையின் கட்டிடத்தில் கண்டிப்பாக இரண்டு வழிகள் இருக்க வேண்டும். அதில் அவசரக்காலவழி கடையின் வெளிச்செல்லும்படி இருத்தல் வேண்டும்.
- கட்டிடம் தார்சு வகை (R.C.Roofing) மேல்கூரையாக அமைந்திருத்தால் சுற்றளவில் 15 மீட்டருக்கு அதே வகை பட்டாசு கடை இருக்க கூடாது.
- கட்டிடத்தின் பரப்பளவு Explosive Rules-2008ன் விதியில் தெரிவித்துள்ளபடி அதன் அளவிற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும் (9 Sq.mt. to 25 Sq.mt) 7)
- காலிஇடத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்கும் போது 50 மீட்டர் சுற்றளவுக்கு காலியிடம் இருக்க வேண்டும். இரண்டு வழிகள் கட்டாயம்
அமைக்கப்பட வேண்டும். - பட்டாசு கடை வைக்க கோருமிடத்திற்கு கதவு எண்ணுடன் கூடிய விலாசம் விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.
- திருமண மண்டபங்கள், அரங்கங்கள், சமுதாய கூடங்கள் ஆகிய கட்டிடங்களில் பட்டாசு கடை அமைக்க கூடாது.
மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் முந்தைய ஆண்டுகளில் அரசால் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு இந்த விதிமுறைகளில் மாற்றம் இருக்கவும் வாய்ப்புள்ளது. கூடுதல் தகவல்களுக்கு அரசு அலுவலகங்களில் விவரங்களை கேட்டுப் பெற்றுக்கொள்ளவும்.