தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருப்பது Talk of the Nation ஆக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்
இதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், என்னுடைய உரையை தொடங்குவதற்கு முன்னால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்ல விரும்புகிறேன். நேற்று இரவில் இருந்து இதுதான் Talk of the Town, ஏன் Talk of the Nation என்பதே இதுதான். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 11.19 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது என்பது தான் அந்த மகிழ்ச்சியான செய்தி.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, நாம் கணித்ததை விட, கிட்டத்தட்ட 2.2 விழுக்காடு அதிகம். முன்பு 9.69 விழுக்காடு என்று மதிப்பிடப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதம் இப்போது 11.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு, 2010-11 ஆம் நிதியாண்டில் கலைஞர் ஆட்சியில் தான், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 13.12 விழுக்காடாக இருந்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் திமுக ஆட்சியில், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியிருக்கிறது.
இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது. இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெறாத மாபெரும் வளர்ச்சி. இது பல்வேறு நெருக்கடிகள், அவதூறுகளுக்கு இடையில் வெற்றியை நாம் அடைந்திருக்கிறோம். இது தனிப்பட்ட ஸ்டாலினின் வெற்றி இல்லை. அமைச்சரவையில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சர், அனைத்துத் துறை அதிகாரிகள், கடைநிலை அரசு ஊழியர்கள் என்று ஒவ்வொரு திட்டத்தையும் முறையாக செயல்படுத்திய நம்முடைய எல்லாருடைய உழைப்புக்கும் கிடைத்திருக்கக்கூடிய கூட்டு வெற்றி இது.
என்னை நம்பி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த நேரத்தில், இந்த வெற்றிச் செய்தியை நான் காணிக்கையாக்குகிறேன். “எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கோடு பயணிக்கும் திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான வெற்றிப் பயணத்திற்கு கிடைத்த நற்சாட்சிப் பத்திரம் தான் இது. இந்த மகிழ்ச்சியான செய்தியுடன், இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், 2,538 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் வாய்ப்பை பெற்றதற்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.
கடந்த நான்கு ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி, டிஎன்யூஎஸ்ஆர்பி உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவும், நகராட்சி நிர்வாகம், கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை மற்றும் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாகவும், 1,08,111 பேருக்கு பணி நியமனம் வழங்கியிருக்கிறோம். திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக, “நான் முதல்வன்” திட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, 3,28,393 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, 2,65,223 பேருக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம். மேலும் விளையாட்டுத் துறையில் முதன்முறையாக தேசிய மற்றும் உலகளவில் சாதனை படைத்திருக்கக்கூடிய தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதன்மூலம் 84 நபர்களுக்கு இந்த ஆண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
‘நான் முதல்வன்’ திட்டத்தில், பயிற்சி பெற்ற 89 இளைஞர்கள் பல்வேறு முக்கிய ஒன்றிய அரசுப் பணிகளில் இடம்பிடித்துள்ளனர். அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தில் படித்த 18 இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது இப்படி, மொத்தம் 6,41,664 பேர், கடந்த நான்காண்டுகளில், பணி நியமனம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


