தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மக்களுக்கான சேவைகள் தற்போது நம்ம சென்னை செயலி, மாநகராட்சியின் இணையதளம் (www.chennaicorporation.gov.in), 1913 அழைப்பு மையம், சமூக வலைதளங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
2025-26-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கப்படும் மேயர் பிரியா என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் வழங்கப்படும் பொது மக்களுக்கான சேவைகள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கப்படும் செயல்பாட்டினை மாநகராட்சி மேயர் பிரியா இன்று (25.08.2025) ரிப்பன் கட்டட வளாக அலுவலகக் கூட்டரங்கில் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
இதற்கான Whats App Chatbot ஆனது சிறந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், நிபுணர்களின் ஆலோசனைகளை மேற்கொண்டு, மக்கள் மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவையினைப் பெற தற்போது உருவாக்கப்பட்டுள்ள 94450 61913 என்கிற Whats App எண்ணை பொதுமக்கள் தங்கள் கைபேசியில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து இந்த Whats App Chatbot எண்ணிற்கு “Hi” அல்லது ‘வணக்கம்’ என பதிவிட வேண்டும். பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவைகளை அதில் உள்ள உரிய வழிகாட்டலுடன் உள் நுழைந்து பெற்றிட வேண்டும்.
இதில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல், புகார் பதிவு, தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் செலுத்துதல் மற்றும் புதுப்பித்தல், ஆவண பதிவிறக்கம், சமுதாயக் கூடம் முன்பதிவு, முதல்வர் படைப்பகம் தொடர்பான சேவைகள், நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப் பிராணிகளின் உரிமம் பதிவு, பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், நகரமைப்பு தொடர்பான சேவைகள், விண்ணப்பங்கள் கண்காணிப்பு, கடை வாடகை செலுத்துதல், கட்டடம் மற்றும் கட்டுமானக் கழிவுகள் தொடர்பான பதிவு உள்ளிட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் 32 வகையான சேவைகளை மக்கள் எவ்வித அலைச்சலும் இன்றி தாங்கள் இருந்த இடத்தில் இருந்து இந்த Whats App Chatbot வாயிலாகப் பெற்றிட முடியும்.