ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. ஆனால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கு உக்ரைன் மீதான போர் தான் முக்கிய காரணம். இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
ஆனால் நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 36 முதல் 38 சதவீதம் வரை ரஷ்யா தான் பூர்த்தி செய்கிறது. இதனால் நம் நாடு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை. இதனால் டிரம்ப் கடும் கோபமடைந்தார். முதற்கட்டமாக கடந்த 1ம் தேதி இந்தியா மீது 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இந்த வரி விதிப்பு 7 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறினார். மேலும் இடைப்பட்ட காலத்திலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று டிரம்ப் கூறினார். ஆனால் மத்திய அரசு ஏற்கவில்லை. தேச நலன் தான் முக்கியம் எனக்கூறி ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
கடந்த 6 நாளில் மட்டும் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்து இருப்பது நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை மொத்தமாக முடக்க உள்ளது. இது ஒருபுறம் இருக்க இன்றைய உத்தரவின் மூலமாக உலகிலேயே டொனால்ட் டிரம்ப் அதிகப்படியான வரிகளை இந்தியாவுக்கு தான் விதித்துள்ளது உறுதியாகி உள்ளது. அதாவது நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரேசிலுக்கும் 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. நம் நாடும், பிரேசிலும் நட்பு நாடுகளாகும். இருநாடுகளும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக பிரிக்ஸ் கரன்சியை உருவாக்க வேண்டும் என்று பிரேசில் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் டிரம்ப் அந்த நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்தார். தற்போது ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் நம் நாட்டுக்கும் 50 சதவீத வரியை விதித்துள்ளார்.
இதையடுத்து இன்று கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். இதில் கடந்த 1ம் தேதி விதிக்கப்பட்ட 25 சதவீத வரி நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன்பிறகு இன்று விதிக்கப்பட்ட 25 சதவீத வரி அடுத்த 21 நாட்கள் கழித்து வர உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நம் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.