விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் கிங்டம் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரித்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இந்த படத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் குரல் எழும்பி வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்!
அண்மையில் வெளியாகியிருக்கும் கிங்டம் திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களைக் குற்றப்பரம்பரைபோல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில், தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது.
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனையும், மாவீரர் தெய்வங்களான விடுதலைப்புலிகளையும், எம்மினத்தின் வீரம்செறிந்த விடுதலைப்போராட்டத்தையும், எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்களையும் கொச்சைப்படுத்தும் எதுவொன்றையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது.
ஆகவே, ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கிங்டம் திரைப்படத்தை தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்வகையில் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் திரையிடுவதை முற்றாக நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், திரையரங்குகளை முற்றுகையிட்டு, அத்திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சீமான் மட்டுமின்றி பலரும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


