ரஷ்யாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் மற்றும் சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வர, 15 அரசியல் கட்சிகளைச் சார்ந்த, 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை மோடியிடம் வழங்கினார்.
அந்த கடிதத்தில், தாமதத்தால் ஏற்படக் கூடிய ஆபத்துகளை உணர்ந்து, அவர்களை உடனடியாக மீட்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கிஷோர், சரவணன் மட்டுமல்ல, அதிகாரப்பூர்வமாகவே 126 இந்தியர்கள் ரஷ்யா – உக்ரைன் போரில் பங்கேற்கச் செய்ய வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடிச் சென்று, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்களை போருக்கு அனுப்புவது, இந்தியா – ரஷ்யா இடையேயான வெளியுறவுத்துறை ஒப்பந்தங்களுக்கு எதிரானது. இவ்வாறு இந்தியர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளித்து, போருக்கு அனுப்புவது முற்றிலும் தவறான செயல், என துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்ததையும், நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்க குரல் கொடுத்ததையும், வெளியுறவுத் துறை செயலாளரைச் சந்தித்து விரிவான விளக்கம் அளித்ததையும் மோடியிடம் தெரிவித்தார். அதனை கேட்டுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவை மேலும் துரிதப்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்ததாக துரை வைகோ தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


