இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இன்று (ஆகஸ்ட் 3) கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவனையின் நிகழ்ச்சிக்காக சென்றார். அவரது வருகையை அறிந்து கோவை விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள், மாஹி, தல தோனி, தோனி மாமா என்று உற்சாகமாக கூச்சலிட்டு வரவேற்றனர்.
தொடர்ந்து தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசுகையில், ”சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை குறித்து எங்களுக்குச் சற்று கவலை இருந்தது உண்மைதான். ஆனால் கடந்த சீசனின் 2வது இன்னிங்ஸில் அது சரி செய்யப்பட்டுவிட்டதாகவே நினைக்கிறேன்” என்றார்.
மேலும் அவர், ”கடந்த சீசனின் பாதியில் முழங்கை காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அவரது வருகை, அடுத்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசைக்குத் தேவையான பலத்தையும், சமநிலையையும் கொடுக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகள் எங்களுக்குச் சிறப்பாக அமையவில்லை. நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. ஆனால், தோல்விகளில் இருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்பதுதான் முக்கியம். போன சீசனில் என்ன தவறு நடந்தது? என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்.
அதற்காக கடந்த சீசனில் நாங்கள் பின்தங்கினோம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், சரி செய்யப்பட வேண்டிய சில ஓட்டைகள் இருந்தன. டிசம்பர் மாதம் ஒரு மினி ஏலம் வருகிறது. அந்த ஏலத்தில் அணியில் உள்ள சில குறைகளைச் சரிசெய்து, அந்த ஓட்டைகளை அடைக்க முயற்சிப்போம்.
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். சிஎஸ்கே அணி பெரும்பாலும் வெற்றிகளையே அதிகம் கண்டுள்ளது. எங்கள் செயல்முறைகள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம், அதே சமயம் முடிவுகளும் எங்களுக்குச் சாதகமாக வர வேண்டும். அடுத்த சீசனில் பெரும்பாலான பிரச்சினைகளை சரிசெய்து, எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


